நானும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்: பெண் ரோபோட் கூறியதால் பரபரப்பு (Video)

நானும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய குழந்தைக்கும் ‘சோபியா’ என்றே பெயர் வைப்பேன் என்று சவுதி அரேபியாவில் பெண் ரோபோட் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஒரு பெண் ரோபோட்டை வடிவமைத்துத் தயாரித்துள்ளது. மனிதர்களின் முகபாவனைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதில் அளிக்கும் வகையில் இயந்திரக் கற்றல் திறன் கொண்டது இந்த ரோபோட். அதன் மூளை சாதாரண ‘வை-பை’ வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில் வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான திறன் இருந்தாலும் இந்தப் பெண் ரோபோட்டுக்கு உணர்வுகள் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவற்றைக் கொண்டுவர இருப்பதாக இதை வடிவமைத்துள்ள நிறுவனத்தின் டேவிட் ஹன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ‘சோபியா’ வுக்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. இதன் மூலம் உலகிலேயே முதன் முதலில் குடியுரிமை பெற்ற ‘ரோபோட்’ என்ற பெருமையை இது பெற்றுள்ளது. குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் ‘சோபியா’ சவுதி அரேபியப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தது.robo

அந்தப் பேட்டியில், குடும்பம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, “குடும்பம் என்பது மிக முக்கியமான வி‌ஷயம். சொந்த ரத்த வகையைத் தாண்டியும், தங்களுக்கு ஒத்த உணர்வுகளைக் கொண்ட சொந்தங்களைக் குடும்பம் என அழைப்பது மிகவும் அற்புதமான ஒன்று.

உங்களுக்குப் பாசமான குடும்பம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லையென்றால் அத்தகைய குடும்பத்தைப் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு. இதில் மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்றுக் கருதுகிறேன். நானும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.என்னுடைய குழந்தைக்கும் ‘சோபியா’ என்றே பெயர் வைப்பேன்” என்று அழகாகப் பதிலளித்தது.

Total Page Visits: 117 - Today Page Visits: 2