சசிகலாவின் குடும்பத்தை அதிரடியாக வளைத்தது வருமானவரித்துறை: தமிழகமெங்கும் பரபரப்பு (Videos)

இன்று அதிகாலை முதல் சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை அதிரடியாக நடந்து வருகிறது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அ.தி.மு.க. பிளவுபட்டதையடுத்து, சசிகலாவின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஜெயா டிவி தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு ஜெயா தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது. வருமான வரி சோதனை நடைபெற்று வருவதை ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் சோதனை நடத்தப்படுவதாகவும், வருமான வரி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனில் சோதனை

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது வாழ்ந்த வீடான சென்னை, போயஸ் தோட்டத்தில் இன்று காலை 6 மணியிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது. இதற்கு முன்னர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது மட்டுமே போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்துள்ளது. இதையடுத்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சோதனை நடக்கிறது.

இன்று அதிகாலை 6 மணி அளவில் போயஸ் தோட்டத்தில் நுழைந்த 10 வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, போயஸ் கார்டனில் செயல்பட்டுவந்த பழைய ஜெயா டி.வி அலுவலகத்திலும் தொடர் சோதனை நடந்துவருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், போயஸ் தோட்டம் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவரது உடமைகள் பலவும் அங்கேதான் உள்ளன.

மேலும், தஞ்சை அருளானந்தா நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில், மன்னார்குடியில் மன்னை நகரில் உள்ள தினகரனில் வீட்டில், சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டில், இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Total Page Visits: 137 - Today Page Visits: 4