130 குழந்தைகளின் தாயான எயிட்ஸ் பாதித்த பெண்

உலக எய்ட்ஸ் நாள்: டிச. 1

குழந்தை செத்துப் பிறக்கட்டும் என்று முன்பு வேண்டிக்கொண்டவர் இன்று 130 குழந்தைகளுக்குத் தாயாக மாறியிருக்கிறார்.

‘எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி நோய். அதன் பாதிப்புக்கு உள்ளானவர்கள், அவமானத்துக்குரியவர்கள். அவர்கள் பிழைக்கவே முடியாது’ என்ற கருத்து நிலவிய காலத்தில், “ஆம், நான் எச்.ஐ.வி. பாசிட்டிவ்தான். ஆனால், அதற்காக ஒடுங்கியிருக்கப் போவதில்லை. என்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டப் போகிறேன்” என்று புறப்பட்டுவந்தவர் ஸ்டெல்லா மேரி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவருக்கு தற்போது 37 வயது.

மறைக்கப்பட்ட அநீதி

இவருடைய 20 வயதில் குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்தார்கள். முதல் மகன் பிறந்தான். ஆரோக்கியமாக இருந்த கணவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கொண்டிருந்தார். இரண்டாவது மகன் வயிற்றில் இருந்தபோது, உடல் மெலிந்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கணவர் இறந்தேபோனார்.

“அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்த தகவல் முன்பே தெரிந்திருந்தும், அவரது குடும்பத்தினர் எனக்குத் தெரியாமல் மறைத்துவிட்டனர். ‘கர்ப்பிணிப் பெண் எதற்கு மருத்துவனைக்கு அலைகிறாய், நீ வீட்டிலேயே இரு. உன் கணவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று நோய் பற்றிய விவரங்களை எனக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார்கள். 2003 டிசம்பரில் அவர் இறந்தார். அதன் பிறகும் குடும்ப கவுரவம் கருதி, அவர் என்ன வியாதியால் இறந்தார் என்பதை என்னிடம் மறைக்கப் பார்த்தார்கள். இருந்தாலும் திருச்சியில் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவனை பெயரை மட்டும் தெரிந்துகொண்டு நேரடியாக அந்த மருத்துவமனைக்கே போய் விசாரித்தேன். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான செய்தியை மருத்துவர் சொன்னார். கூடவே, ‘உனக்கும், குழந்தைக்கும் நோய் பாதிப்பு இருக்கக்கூடும் என்பதால், உங்களையும் அழைத்து வருமாறு அவர்களிடம் சொல்லி அனுப்பினேனே?’ என்று கேட்டார்.

தலையில் இடிவிழுந்ததுபோல் இருந்தது. என் ரத்தத்தை பரிசோதித்தபோது, எச்.ஐ.வி. பாசிட்டிவ் என்று வந்தது. எனது வாழ்நாட்கள் எண்ணப்படுவதாக உணர்ந்தேன். இரண்டரை வயதே ஆன மகனின் ரத்த மாதிரியை எடுத்தபோது, மயக்கமே வந்துவிட்டது. ஆனால், அவனுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்று வந்தது. இருப்பினும் வயிற்றில் வளர்கிற குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதற்கு சாத்தியம் அதிகம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ‘வேளாங்கண்ணி மாதாவே, அப்படி ஒரு நோயோடு பிறப்பதற்குப் பதில், என் பிள்ளை இறந்தே பிறக்கட்டும்’ என்று வேண்டிக்கொண்டேன். நல்லவேளையாக, இரண்டாவது மகனுக்கும் எச்.ஐ.வி. தொற்று இல்லை” என்று சொன்னபோது அவரது கண்களில் நீர் திரையிட்டது.

முடங்காமல் தடுத்த தன்னம்பிக்கை

கணவர் காலம் போலின்றி, இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் எய்ட்ஸ் பற்றிய புரிதல் ஸ்டெல்லா மேரிக்கு ஏற்பட்டிருந்தது. ரேடியோக்களில், எச்.ஐ.வி. பாதிப்புள்ள தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கேட்டிருக்கிறார். குழந்தை கதறி அழும்போதெல்லாம், தானாகவே தாய்ப்பால் சுரந்தாலும் அதைக் குழந்தைக்குப் புகட்டாமல் உணர்வைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். சத்துள்ள இணை உணவுகளையும் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டதுடன் குழந்தைகளுக்கும் அதைக் கொடுத்து வளர்த்திருக்கிறார். பெரிதாகப் படித்திருக்காவிட்டாலும், அவரது தாய் வீட்டினரும் உடன்பிறந்தோரும் அவரை வெறுத்து ஒதுக்காமல் ஆறுதலும் அரவணைப்பும் தந்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றவருக்கு புதுக்கோட்டை மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத்தின் தலைவர் கே.எம்.ராமசாமி கொடுத்த ஊக்கத்தால், 2003-ல் அந்தச் சங்கத்தின் ஆற்றுப்படுத்துநராகப் பணியில் சேர்ந்தார். அதிலிருந்து ஒவ்வொரு நோயாளியையும் தன் குடும்பத்தினரைப் போல பாவித்து ஆலோசனைகளை வழங்கிவந்தார் . 2007-ல் தன்னைப் போலவே தொற்றுள்ள ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உயர்ந்தார்.

மகன்களின் அக்கறை

“எனக்கு நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்ப காலத்தில் அதற்கான சிகிச்சை என்று எதுவும் இல்லை. இருந்தாலும் பருவகால நோய்கள் தாக்கிவிடாதவகையில் சத்தான உணவை உண்டு, ஆரோக்கியத்தைப் பேணிவந்தேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.டி. எனும் கூட்டுமருந்து உட்கொள்ளத் தொடங்கினேன். இளையவன் மெலிந்துபோய் இருந்ததால், பயந்துபோய் அவனுக்கு மறுபடியும் பரிசோதனை செய்துபார்த்தேன். தாய்ப்பால் குடிக்காதது உள்ளிட்ட குறைபாடுகளால்தான் மெலிந்திருக்கிறான் என்று தெரிந்தது. அவனது நலனில் கூடுதல் அக்கறை காட்டினேன். இப்போது யாவரும் நலம்” என்று புன்னகைக்கிறார் ஸ்டெல்லா.

இவரது மூத்த மகன் 12-ம் வகுப்பும் இளைய மகன் 9-ம் வகுப்புப் படிக்கின்றனர். இருவரிடமும் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை மறைக்காமல் கூறியிருக்கிறார் ஸ்டெல்லா. விளைவாக, தாயின் உடல்நிலை சார்ந்து அவர்களும் அக்கறை காட்டுகிறார்கள். வேளாவேளைக்கு மருந்து எடுத்துக்கொடுக்கிறார்கள். இருவரும் அரசுப் பள்ளியில் நன்கு படிக்கிறார்கள். 10-ம் வகுப்பில் 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மூத்த மகன், பிளஸ் 2-ல் 1,100 மதிப்பெண் எடுக்கும் வேகத்தோடு படித்துக்கொண்டிருக்கிறார்.

பரிவால் கிடைத்த உறவுகள்

தன்னம்பிக்கையாலும் குடும்பத்தினரின் புரிதலாலும் சக மனிதர்களின் அக்கறையாலும் அன்பான கணவர், பொறுப்பான மகன்கள் என்று இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற்றுவிட்டார் ஸ்டெல்லா. இருந்தாலும் அவர் தனது உண்மையான மகிழ்ச்சியாக எதைக் கருதுகிறார் தெரியுமா?

“அரசு ஊழியர் ஒருவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதைப் பெரிய அவமானமாகவும், வாழ்க்கையே போய்விட்டதாகவும் எண்ணிய அவர் தன் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டார். ‘10 நிமிடம் பேசிவிட்டு எந்த முடிவு வேண்டுமானாலும் எடுங்கள்’ என்று அவரிடம் பேச ஆரம்பித்தேன். என்னுடைய கதை, இன்னும் பலரின் பழைய கதைகளையும் அவர்களின் இன்றைய நிலையையும் எடுத்துச் சொல்லி அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினேன். இது வியாதியே அல்ல, நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடுதான். நல்ல முறையில் சாப்பிட்டு, உடல்நிலையைப் பராமரித்தால் வழக்கம்போல் இயல்பாக வாழலாம் என்று சொன்னேன். இப்போது அவர்கள் இரண்டு குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவருடைய மனைவியும் நன்றாகப் கவனித்துக்கொள்கிறார். அவர் என்னை ‘தங்கச்சி’ என்று உரிமையோடு அழைக்கிறார்.

எங்கள் சங்கத்தில் 130 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் தாயற்றவர்கள் அனைவரும் என்னை அம்மா என்றும், தாயுள்ளவர்கள் அத்தை என்றும்தான் அழைக்கிறார்கள். எச்.ஐ.வி.யால், என்னிடம் இருந்து ஒரு உறவைத்தான் பறிக்க முடிந்தது. ஆனால், என் தன்னம்பிக்கையோ 1,000 பேரின் அன்பைப் பெற்றுத் தந்திருக்கிறது” என்று புன்னகைக்கிறார்.

திரும்பக் கிடைத்த வேலைகள்

ஸ்டெல்லா மேரி போலவே, மூன்று குழந்தைகளுடன் கணவரால் கைவிடப்பட்ட சுசீலா, கணவரைப் பறிகொடுத்த இந்திராணி போன்ற பெண்களும், புதுக்கோட்டை மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத்தின் தலைவர் ராமசாமியோடு இணைந்து பணியாற்றுகிறார்கள். எச்.ஐ.வி. பாதிப்பைக் காரணம் காட்டி அங்கன்வாடி பணியில் இருந்து விலக்கப்பட்ட பெண் உட்படப் பலரது உடல்நிலையை மேம்படுத்தி, அதே வேலையில் சேர வைத்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் 9 பேருக்கு பி.எச்.இ.எல். நிறுவனம் மூலம் இலவசத் தையல் இயந்திரம் வாங்கித் தந்துள்ளனர். 14 பேருக்குத் தலா 4 ஆடுகள், 18 பேருக்குக் கறவை மாடுகள், 1,500 பேருக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாத உதவித்தொகை ரூ.2,000 வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்.

“இந்தக் கூட்டுப்பணி என் உயிருள்ளவரை தொடரும். வாழ்வது ஒருமுறை, நல்லபடியாக அதை வாழ்ந்து காட்டுவோமே” ஸ்டெல்லாவின் பேச்சில் நம்பிக்கை தெறிக்கிறது!

கே.கே.மகேஷ்-

Total Page Visits: 108 - Today Page Visits: 1