சென்னையில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: இலங்கையில் புயல், மழைக்கு 7 பேர் பலி (Video)

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தலைநகர் சென்னையிலும் நேற்று முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை நகரில் நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், வடபழனி, அசோக்பில்லர், கத்திப்பாரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

மேலும், அண்ணாசாலை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு இயங்கியுள்ளது.

இலங்கையில் புயல் மழைக்கு 7 பேர் பலி

இலங்கையில் பயங்கர புயலால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகள் மற்றும் வீடுகள் மீது விழுந்ததில் 7 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 5 மீனவர்கள் மாயமானார்கள். ஏராளமான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரமே இருளில் மூழ்கின.

சென்னை, பெங்களூருவில் இருந்து கொழும்பு வந்த விமானங்கள் மட்டாலா விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

Total Page Visits: 128 - Today Page Visits: 1