யாழில் பெண் ஊடகப் பணியாளர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது வேலணையில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வேலணையில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரைக் காணவில்லை எனத் தேடியபோது இன்று அதிகாலை 1.00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் பல வருடங்களாக இவர் பணியாற்றினார். கடந்த வருடம் அங்கிருந்து வெளியேறிய இவர் காலைக்கதிர் பத்திரிகை நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் சில மாதங்கள் பணியாற்றினார்.

திருமணத்தின் பின்னர் வேலணையில் சென்று வசித்தமையால் இவர் பத்திரிகை அலுவலகப் பணியை இடைநிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 88 - Today Page Visits: 1