கொலையாளி தஷ்வந்த் சிக்கியது எப்படி? அதிரடி ரிப்போர்ட் ….

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்த தஷ்வந்த், பெற்ற தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, மும்பைக்குத் தப்பிச்சென்றார். அவரைப் போலீஸார் கைது செய்தனர். அது குறித்த தகவல்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார். விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சிறுமி கொலை, பலாத்காரம் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இடையிலேயே வெளியே விடப்பட்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த தஷ்வந்த் வீட்டிலிருந்த நகை பணத்துடன் தலைமறைவானார்.தஷ்வந்தைப் பிடிக்க போலீஸார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின் செல்போனையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

தஷ்வந்த் கைது செய்யப்பட்டது, கொலை செய்த பின்னர் தப்பிச்சென்றது குறித்த தகவல்கள் விசாரணையில் வெளியாகி உள்ளன. கடந்த சனிக்கிழமை த்ன் தாயாரை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்ற பின்னர் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் தஷ்வந்த் தப்பி இருக்கிறார். உடனடியாக தங்க நகைகளை விற்று பணமாக்க மணிகண்டன் என்பவரிடம் கொடுத்துள்ளார். மணிகண்டன் மீது பல வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பின்னர் தன்னை போலீஸ் தேடுவதை அறிந்து தப்பித்துச்செல்ல திட்டமிட்டுள்ளார். தான் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தபோது பழக்கமான பாலியல் தொழில் புரோக்கரான ரஞ்சித்குமார் என்பவரின் உதவியை நாடியுள்ளார். ரஞ்சித்குமார் தனக்கு பழக்கமான பாலியல் தொழில் செய்யும் மும்பைப்பெண் ஒருவரின் எண்ணை கொடுத்து பேசச்சொல்லி அங்கு சென்று தலைமறைவாக இருக்கும்படி கூறியுள்ளார்.

காட்டிக்கொடுத்த செல்போன்

உடனடியாக தஷ்வந்த் வாடகைக் கார் ஒன்றின் மூலம் தரை வழியாகவே அடுத்த மாநிலத்துக்குத் தப்பித்து மும்பை சென்றுள்ளார். மும்பை பெண்ணிடம் கடைசியாக பேசிவிட்டு தனது செல்போனை தஷ்வந்த் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதையடுத்து மும்பைக்கு தஷ்வந்த் தப்பிச் சென்றிருக்கிறார் என அறிந்து தனிப்படை போலீஸார் மும்பை விரைந்தனர். மும்பைக்குச் சென்ற தஷ்வந்த் செம்பூர் என்ற இடத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை சந்தித்து அவருடைய பாதுகாப்பில் தங்கியிருந்துள்ளார். அங்கும் அவருக்கு ஒரு பிரச்சினை இருந்துள்ளது. ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோது இந்தியா முழுதும் தஷ்வந்த் முகம் பிரசுரமாகி தெரிந்திருந்ததால், அவரால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

சென்னை போலீஸாரும் அனைத்து மாநில போலீஸாருக்கும் தஷ்வந்தின் புகைப்படத்தை அனுப்பியதால் தலைமறைவாகவே வாழ்ந்து வந்துள்ளார். முகத்தை மறைக்கும் வகையில் பெரிய தாடியையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போன் டவரை போலீஸார் ஆய்வு செய்தபோது வேறொரு சிம் கார்டு மூலம் அதே செல்போனிலிருந்து சென்னைக்கு போன் பேசியதை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த டவரை வைத்தும், முதலில் மும்பைக்கு தஷ்வந்த் பேசிய பெண்ணின் எண்ணை கண்காணித்தும் வந்ததில் தஷ்வந்த் இருக்கும் இடம் தெரிய வந்தது. அங்கு விரைந்த போலீஸார் நேற்று தஷ்வந்தை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

தஷ்வந்த் கைதின் போது ஏற்பட்ட களேபரத்தில் தஷ்வந்தை யாரோ கடத்துவதாக மும்பை போலீஸாருக்கு தகவல் செல்ல, மும்பை போலீஸார் சென்னை போலீஸாரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சென்னை போலீஸார் விளக்கமளித்தனர். அதை மும்பை போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை.முறைப்படி தஷ்வந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் போட்டு அழைத்துச் செல்லும்படி கூறியதன் அடிப்படையில் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரவுள்ளனர். அதற்கு மத்திய தொழிற்பாதுகாப்புப்படை போலீஸார் அனுமதியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தஷ்வந்துக்கு உதவிய ரஞ்சித்குமார், நகைகளை விற்பதற்கு வாங்கிச் சென்ற மணிகண்டன் ஆகியோரை போலீஸார் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தஷ்வந்த் இன்று நள்ளிரவு சென்னை அழைத்துவரப்படலாம். சென்னை வந்த பின்னரே தனது தாயை ஏன் கொன்றார் என்ற விபரம் வெளியே வரும்.

Total Page Visits: 60 - Today Page Visits: 2