திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது (Video)

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் சிறப்புடன் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்சமூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர். தீப விழாவின் உச்ச கட்டமாக, 10-வது நாளான நேற்று 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நடைமுறைகள் தொடங்கின.

இதையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.

பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.

மாலை 6 மணிக்கு சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதேசமயத்தில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பருவத ராஜகுல சமுதாயத்தினர் மகா தீபத்தை ஏற்றினர். அப்போது கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று விண்ணதிர பக்தி கோ‌ஷங்கள் முழங்கினர். கோவில் கொடி மரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட வாணவேடிக்கை பக்தர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.

மகா தீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் யாரும் மின் விளக்குகளை போடவில்லை. மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே, அனைவரும் மின்விளக்குகளை போட்டனர். இதனால், திருவண்ணாமலை நகரமே ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. கிரிவலம் வந்த பக்தர்கள் மகா தீபம் ஏற்றப்பட்டதும் தீபத்தை வணங்கிவிட்டு கிரிவலத்தை தொடர்ந்தனர். ஆங்காங்கே விளக்கேற்றியும் வழிபட்டனர்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்பட்டதையடுத்து பழனி, திருச்சி உள்ளிட்ட கோவில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபமானது பிரமாண்ட தீப கொப்பரையில் 3.5 டன் நெய், ஒரு டன் எடை கொண்ட திரி மூலம் ஏற்றப்பட்டுள்ளது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். சுமார் 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

மகா தீபத்தை தரிசிப்பதற்காக வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Total Page Visits: 216 - Today Page Visits: 2