நூறாவது படங்களின் நாயகனாகிறார் விஜய்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100ஆவது படத்தின் நாயகனாக விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழ் சினிமாவுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமும் ஒன்று. சரத்குமாரின் பெரும்பாலான படங்களை இந்த நிறுவனமே தயாரித்திருக்கிறது. தற்போது 100ஆவது படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவந்தது. அந்த வகையில் நடிகர் விஜய்யிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இது குறித்த உறுதியான தகவலையும் நடிகர் ஜீவா பேட்டி ஒன்றில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு, பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா என சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 6 படங்களின் நாயகனாக நடித்திருந்தார் விஜய். இப்போது சூப்பர் குட் பிலிம்ஸின் 100ஆவது படத்தின் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 100ஆவது படத்தின் நாயகனாகவும் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். சென்னையில் நடைபெற்ற இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Total Page Visits: 103 - Today Page Visits: 2