102 வயது கேரக்டரில் கலக்கிய அமிதாப்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் 102 வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட் சினிமாவுலகில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், மாறுபட்ட சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெற்றிகண்டுவருபவர். அப்பா கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடித்துவரும் ‘102 நாட் அவுட்’ படத்தில் 102 வயது அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது 75 வயது மகனாக ரிஷி கபூர் நடித்திருக்கிறார். இந்தப் படம் ‘102 நாட் அவுட்’ என்ற குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உமேஷ் சுக்லா இயக்கிவரும் இப்படத்தின் மூலம் 26 வருடங்களுக்குப் பிறகு அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார் ரிஷி கபூர். இதற்கு முன்பு இருவரும் அமர் அக்பர் ஆண்டனி, கபீ கபீ, நசீப், கூலி போன்ற படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது வெளியாகியிருக்கும் டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளைப் பார்க்கையில் அப்பா மகன் உறவுநிலையை அழுத்தமாகப் பேசும் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அமிதாப், ரிஷி கபூர் இருவரும் முதிய வயதில் நடித்திருக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப்பும், ரிஷி கபூரும் நடித்திருப்பதால் மே 4ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Total Page Visits: 133 - Today Page Visits: 2