லட்சுமி குறும்பட இயக்குநர் படத்தில் களமிறங்கும் நயன்தாரா

லட்சுமி குறும்படத்தின் இயக்குநர் கே.எம். சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்த அறம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த நயன்தாராவுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்ததோடு சிறந்த நடிகைக்கான பல விருதுகளும் கிடைத்தன. இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், நயன்தாரா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை லட்சுமி, மா என்ற இரு குறும்படங்களை இயக்கிய கே.எம். சர்ஜுன் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹாரர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தைத் அறம் படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த தகவலை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

கே.எம். சர்ஜுன் இயக்கத்தில் உருவான லட்சுமி, மா என்ற இரு குறும்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் முன்னணிக் கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Total Page Visits: 64 - Today Page Visits: 1