கவர்ச்சி பற்றி சமந்தா விளக்கம்

சினிமாவில், கவர்ச்சியைத் தேவையில்லாமல் திணித்தால் அது பிடிக்காது என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணியில் இருக்கும் நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

சமீபத்தில் மும்பை பத்திரிகைகளுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று எனது கணவரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ தடை விதிக்கவில்லை. அதனால்தான் நான் தொடர்ந்து நடிக்கிறேன். கணவரும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் விரும்பிய தொழிலில் நீடிப்பதில் எந்தக் கஷ்டமும் இருக்காது. சினிமா என்பது கவர்ச்சி உலகம் அதைத் தெரிந்துகொண்டுதான் இந்தத் துறைக்கு வந்தேன். கதைக்குத் தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு இல்லை. ஆனால், கவர்ச்சியை தேவையில்லாமல் படத்தில் திணித்தால் அது எனக்குப் பிடிக்காது, அது நன்றாகவும் இருக்காது. திருமணத்துக்குப் பிறகும் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்து இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே விஷாலுடன் இரும்புத்திரை படத்தில் நடித்துவரும் சமந்தா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், சாவித்திரி வாழ்க்கையை மையமாகக்கொண்டு தயாராகும் நடிகையர் திலகம், தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 117 - Today Page Visits: 1