கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா?

சினிமா அவ்வளவுதான்… இனி அது மெல்லச் சாகும் என்று சொல்லும்போதெல்லாம் ஒரு புதிய டீம் வந்து எல்லாவற்றையும் தலைகீழாகப் போட்டு புரட்டி புத்துயிர் கொடுத்துவிடும். ஒருதலை ராகம், புது வசந்தம், சேது, காதல், பீட்சா என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. அது போலத்தான் சினிமாவை நம்பிவரும் புதியவர்களும். புதியவர்கள் என்றவுடன் இளைஞர்கள் என்று தோன்றினால் அது தவறு. சினிமாவில் எந்த அளவுக்கு இளைஞர்கள் வருகிறார்களோ, அதே அளவுக்கு ஐம்பதைக் கடந்தவர்களின் வரவும் அதிகம்.

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா?

‘அந்தக் காலத்துல எம்.ஜி.ஆரே 40க்கு மேலதான் வந்து ஜெயிச்சாரு. எனக்கு என்ன 45 ஆறது. அட்லீஸ்ட் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆயிட மாட்டேனா’ என்ற நம்பிக்கையோடு தினம் ஒவ்வொரு ஆபீஸாக ஏறி, தன் போட்டோவைக் கொடுத்துவிட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டரைக் கைக்குள் போட்டுக்கொள்ள மாதத்தில் ஒருவர் என முறை வைத்து சரக்கடித்து, நட்பு கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். சரக்கின் நன்றிக் கடனுக்காக, அவர் கோ டைரக்டரிடம் அறிமுகப்படுத்திவிடுவார். சிகப்பாக இருந்தால் கோயில், கல்யாணம், ஆபீசர் போன்ற கேரக்டர்கள்; கொஞ்சம் வசனம் பேச வரும் என்றால் டாக்டர் போன்ற கேரக்டர்கள் கிடைக்கும். இப்படிப் பல லாபி செய்து கிடைக்கும் வாய்ப்பை டயலாக் ஒழுங்காகப் பேசாத காரணத்தால், பணால் ஆகிப்போன சம்பவங்கள் இவர்களுக்கு ஏராளம். அந்த டைரக்ஷன் டீமைப் பொறுத்தவரை அப்படி ஒருமுறை வாய்ப்பு போனால் மீண்டும் டயலாக் வாய்ப்பு வருவது என்பது மிகவும் கஷ்டம்தான்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஆண் பெண்களிடம் உங்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தால் ஓகேவா என்று கேட்டால் கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் பேர் தலையாட்டுவார்கள். எப்படிங்க அவ்வளவு தைரியமா சொல்லுறீங்க என்று கேட்டோமானால், சமீபத்தில் மிகச் சாதாரணமாக வந்து மிகப் பெரிய இடத்தை அடைந்த ஹீரோ யாராவது ஒருவரின் பெயரைச் சொல்லி, “நான் அவனைவிட ஸ்மார்ட்டா இல்லை? ரெண்டு படம் நடிச்சா நமக்கும் நடிப்பு வந்திடப்போவுது…” என்பார்கள்.

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா?

மிடில் ஏஜ் கேரக்டர்களில் நடிக்க எப்பவுமே சினிமாவில் ஆட்கள் தேவைதான். போலீஸ், ஏட்டு, குருக்கள், ஐயர், ஆபீஸர்ஸ், கலெக்டர், ஜட்ஜ், டாக்டர் என டிமாண்ட் அதிகம். அப்படிப்பட்ட கேரக்டர்களில் புதியதாக வந்து வாய்ப்புகள் கிடைத்து நல்ல நடிகர்களாக ஜெயித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதை விட அதிக அளவில் தோல்வியடைந்தவர்களும் உண்டு.

பெரும்பாலும், செய்யும் தொழில் நஷ்டமடைந்தவர்கள், கம்பெனி லாஸ் ஆகி வேறு வேலைக்குப் போக முடியாதவர்கள் என வாழ்க்கையில் தோற்றவர்கள் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் கொஞ்சம் வசதியாக காரோ, பைக்கோ வைத்துக்கொண்டு, சுய தொழில் ஒன்றைச் செய்துகொண்டே நடிப்பையும் ஒரு கை பார்க்க முயல்கிறவர்கள் இருக்கிறார்கள். இரண்டு வகையான ஆட்களில் இரண்டாம் வகை ஆட்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே வாய்ப்புகள் கிடைக்கும். ஏனென்றால் பொருளாதார சுதந்திரம், அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் உதவி இயக்குநர்களின் தொடர்பு. நட்பின் காரணமாய் சின்னச் சின்ன கேரக்டர்களில் வாய்ப்பு கிடைத்து சட்டென இரண்டொரு சீன்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றுவிடுவார்கள்.

ஆனால், முதல் வகை ஆட்களுக்கு அப்படியான வாய்ப்பு வருவது அவ்வளவு சுலபமல்ல. தொடர்ந்து அலைய வேண்டும். ஏஜெண்டுகள் மூலமாகக் கூட்டம் கூட்டமாக வரும் காட்சிகளில் போய் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாய் வலம் வந்து அங்கே அவர்களின் கட்டிங் போகக் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்கிற நிலையின் காரணமாக இரண்டாம் நிலை ஆட்கள் போல நேரடியாக உதவி இயக்குநர்கள் தொடர்பின் மூலமாக வாய்ப்பை பெற செலவு செய்ய முடியாததால் கேரக்டர்கள் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அப்படிக் கிடைக்கும் வாய்ப்பு ‘மெடிக்கல் மிராக்கிள்’தான்.

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா?

நண்பர் ஒருவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வலம் வந்துகொண்டிருந்தவர். திடீரென காலையில் ஒரு கால்… “சார்.. உடனே வாங்க லொக்கேஷனுக்கு ஒரு த்ரூஅவுட் ரோல் வாய்ப்பு” என்று உதவி இயக்குநர் சொன்னதும் “பெருமாளே… கண்ணைத் தொறந்திட்டே…” என்று பதற்றத்துடன் போய்ச் சேர்ந்தார். ஏற்கனவே ஷூட்டிங் ஆரம்பித்திருந்தது. டைரக்டரின் நண்பர் ஒருவரை அந்த கேரக்டருக்கு பிக்ஸ் செய்திருக்க, அவர் ஏனோ வரவில்லை. அவருக்குப் பதிலாகத்தான் இவருக்கு அழைப்பு. அவசர அவசரமாக கமிஷனர் உடை போடப்பட்டு, வசனம் எல்லாம் சொல்லிக் கொடுத்தாயிற்று. நண்பருக்கு பதற்றமாய் இருந்தாலும், பெரிய நடிகர்கள் காம்பினேஷன். நிச்சயம் படத்தின் நீளத்துக்காகக் குறைக்கபட முடியாத காட்சி என்று காட்சியின் வசனத்தை படிக்கும்போதே அவருக்கு தெரிந்தது. சட்டென மனதில் வாங்கிக்கொண்டு தயாரானார்.

“சார். சொதப்பிறாதீங்க” என்று உதவி இயக்குநர் காதை கடித்துவிட்டுப் போனார். இவருக்குப் பதற்றமாய் இருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல் தயாரானார். ஷாட்டுக்கு முன்னால் ஒரு மானிட்டர் பார்க்கத் தயாரானார்கள். முக்கிய நடிகர்கள் காம்பினேஷனில் காட்சி விவரிக்கப்பட்டு, மானிட்டர் ஆரம்பிக்க, நண்பரின் முறை வந்ததும் சொல்லிக் கொடுத்தது போல நான்கு வரி டயலாக்கை நல்ல மாடுலேஷனோடு சொல்லி முடித்தார். இயக்குநர் சந்தோஷமாகக் கை தட்டி, குட் என்று சொல்லிவிட்டு டேக் போகலாமா என்றபோது. பரபரப்பாக ஒருவர் உள்ளே நுழைந்தார். இயக்குநரிடம் கொஞ்சம் நெருக்கமாக நின்று தயக்கமாக ஏதோ காதோரமாகச் சொல்ல, இயக்குநர் நண்பரையே பார்த்தபடி அவருடன் பேசி முடித்த பின் உதவி இயக்குநரைப் பார்த்து, “பிரபா.. சாருக்கு கமிஷனர் டிரஸ்ஸைப் போட்டுட்டு, இவரை இன்ஸ்பெக்டராக்கிடுங்க” என்று கேமராமேனிடம் ஷாட் விளக்கப் போய்விட்டார்.

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா?

நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. உதவி இயக்குநர் அருகே வந்து “அன் லக்கி சார் நீங்க. இவனுக்குப் பதிலாத்தான் உங்களை இங்கே போட்டேன். அவனே திரும்ப வந்திட்டான். டைரக்டருக்கு ரொம்ப க்ளோஸு அவன்” என்று அவர் டிரஸ்ஸில் உள்ள கமிஷனருக்கான ஸ்டார்களைக் காஸ்ட்யூமரிடம் கழற்றச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அன்றைய ஷூட்டிங்தான் நண்பர் நடித்த கடைசிப் படம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: sankara4@gmail.com)