வில்லியாக மிரட்டும் வரலட்சுமி: மூன்று வேடங்களில் ராய் லட்சுமி

மாரி 2 படத்தில் தான் வில்லி வேடத்தில் நடிப்பதாக வலம்வரும் செய்திகளை மறுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

2012ஆம் ஆண்டு போடா போடி மூலம் கதாநாயகியாக அறிமுகமானாலும் எண்ணிக்கைக்காக அதிக படங்களில் நடிக்காமல் குறிப்பிட்ட படங்களைத் தேர்வுசெய்து நடித்துவருகிறார் வரலட்சுமி.

மற்ற கதாநாயகிகளுடன் இணைந்து நடிப்பது; முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றால் இரண்டாவது, மூன்றாவது கதாநாயகி என்றாலும் நடிக்க முன்வருவது; வில்லி கதாபாத்திரத்தையும் துணிந்து ஏற்பது எனத் திரையுலகில் தனித்து தெரிகிறார் வரலட்சுமி.

சிபிராஜ் நடித்த சத்யா படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த வரலட்சுமி, சண்டக்கோழி 2 படத்தில் வில்லி வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் அதில் கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ் நடிப்பில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் மாரி 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ள வரலட்சுமி அந்தப் படத்திலும் வில்லி வேடம் ஏற்றுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதை வரலட்சுமி மறுத்துள்ளார்.

படம் குறித்து டெக்கான் கிரானிக்கிள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நான் வில்லி வேடத்தில் நடிக்கவில்லை; நடிப்பதாக யாரிடமும் கூறவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று வரலட்சுமி கூறியுள்ளார்.

மூன்று வேடங்களில் ராய் லட்சுமி

நீயா 2 படத்தில் மூன்று விதமான வேடங்களில் நடிப்பதாக ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியத் திரையுலகில் வலம்வந்த ராய் லட்சுமி ஜூலி 2 படத்தின் மூலம் கடந்த ஆண்டு இந்தியில் அறிமுகமானார். தற்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ள ராய் லட்சுமி, ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.

எத்தன் பட இயக்குநர் சுரேஷ் இயக்கும் இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்ட ராய் லட்சுமி, “பேன்டஸி, த்ரில்லர், காதல் எனப் பல ஜானர்களை உள்ளடக்கி இப்படம் தயாராகிவருகிறது. பாம்பை மையமாக வைத்தே உருவாகிவருகிறது. மூன்று வேடங்களில் நடிக்கிறேன். அதில் ஒன்று ‘நாகினி’ கதாபாத்திரம். படத்தில் இடம்பெறும் மூன்று கதாநாயகிகளும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என வெவ்வேறு காலப் பின்னணியில் தோன்றுகிறோம். நான் மற்ற கதாநாயகிகளுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் உள்ளன” என்று கூறியுள்ளார்.

“1979ஆம் ஆண்டு கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான ‘நீயா’ படத்தை நினைவுபடுத்தும் விதமாக இருந்தாலும் இப்படம் நிறைய மாறுபட்டு, முற்றிலும் புதுமையாக இருக்கும்” என ராய் லட்சுமி கூறியுள்ளார்.

இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் நடித்துவரும் ராய் லட்சுமி, ஐந்து படங்களைக் கைவசம் வைத்துள்ளார். “விரைவில் எனது இரண்டாவது பாலிவுட் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன். மலையாளத்தில் மம்மூட்டி சாருடன் இணைந்து நடித்துவருகிறேன். அவரோடு நான் பணியாற்றும் ஐந்து அல்லது ஆறாவது படமாக இது இருக்கும்” என்றும் ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

Total Page Visits: 103 - Today Page Visits: 1