எக்ஸ் வீடியோஸ் ஆபாச இணையதளங்களுக்கு எதிரானது: சஜோ

எக்ஸ் சோனுக்குக் கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்குக் கிடைத்தது எப்படி என்று படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெறுவதென்பது அந்தத் துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிலும், அரசு துறை சார்ந்தவர்களையும் பாதிக்காத வகையில் ஒரு படம் இருந்தால் பிரச்னையில்லை.

சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும். ஆனால், கொஞ்சம் சமூகப் பிரச்னைகள், கவர்ச்சி உள்ள படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்படுகின்றன. அப்படி வெளிவர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்தி படம்.

மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளிவர முடியாமலே போய்விட்டது. ஆனால், இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்துக்கு ‘ஏ’ சான்றிதழும், தணிக்கைத் துறை பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எக்ஸ் சோனுக்குக் கிடைக்காத சான்றிதழ், எக்ஸ் வீடியோஸுக்குக் கிடைத்தது எப்படி என்று படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“நான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்புக் குறித்த கருத்துகளை. வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது.

படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம். ஆனால் குறிப்பாக சொல்லப் போனால் அந்த தளத்துக்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அழகான பெண்களின் உடலமைப்பைக் குறிவைக்கும் ஆண்ட்ராய்டு மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்தப் படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள்” என்று ஆச்சர்யமாகச் சொன்னார்.

தொடர்ந்து, “இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது.

பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப் போகிறது? அதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.

நான் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும்” என்றும் கூறினார்.

எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ், இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாளரான சஜோ சுந்தர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ளனர். கலர் ஷாடோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Total Page Visits: 1688 - Today Page Visits: 22