நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

[sm-youtube-subscribe]

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி தொடர்ந்த வழக்கினை

சென்னை உயர் நீதிமன்றம் இன்று(27)தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுச் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர்

ஆயுள் தண்டனைக் கைதிகளாகக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த- 2014 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்னமும் நிலுவையிலுள்ளது.

 

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத்

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு

நளினி கடந்த- 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன் “ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது

தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளமையால் அவர்கள் வழங்கும்

உத்தரவின் அடிப்படையில் நளினியின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்” எனத் தீர்ப்பு வழங்கினார்.

 

இதனை எதிர்த்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளமையால்

நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையிலுள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 27 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம், இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளமையால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாதெனவும்,

நளினியை விடுவிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

Total Page Visits: 165 - Today Page Visits: 1