கொரோனா வைரஸால் இத்தாலியில் 10,000 உயிரிழப்பு ! உலக மொத்த உயிரிழப்பு 32,000 !

கோவிட்-19 (கொரோனா) வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31,000 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் 662,402 பேர் வைரசால் தாக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் நேற்று மாத்திரம் 3,485 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் நேற்றும் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகின.

இத்தாலியில் 889, ஸ்பெயினில் 844, அமெரிக்காவில் 506 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸ் 319, இங்கிலாந்து 260, ஈரான் 139 உயிரிழப்புக்களை சந்தித்தன.

கொரோனாவினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 30,829 ஆக உயர்ந்துள்ளது. 662,402 பேர் வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். 141,465 பேர் குணமடைந்துள்ளனர்.


அமெரிக்காவில் மாத்திரம் 123,271 பேர் வைரஸ் பாதிப்பிற்கு இலக்காகியுள்ளனர். இது, உலகின் மற்ற எந்த நாட்டையும் விட, அதிகமான தொற்று எண்ணிக்கையாகும். நேற்றைய அதிகரித்த உயிரிழப்பை தொடர்ந்து, அமெரிக்காவின் மொத்த உயிரிழப்பு 2,202 ஆக உயர்ந்தது. 19,145 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காகினர்.

இத்தாலியின் மொத்த உயிரிழப்பு 10,023 ஆக உயர்ந்துள்ளது. 92,472 பேர் வைரஸ் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். 5,974 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காகினர்.

ஸ்பெயினின் மொத்த உயிரிழப்பு 5,982 ஆக உயர்ந்துள்ளது. 73,235 பேர் வைரஸ் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். 7,516 புதிதாக தொற்றிற்கு இலக்காகினர்.பிரான்ஸில் புதிதாக 4,611 பேர் தொற்றிற்கு இலக்காகினர். 37,575 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 2,314 ஆக உயர்ந்தது.

ஈரானில் நேற்று 3,076 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்கானார்கள். 35,408 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 2,517 ஆக உயர்ந்தது.

இங்கிலாந்தில் 17,089 பேர் வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்று 2,546 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு 1,019 ஆக உயர்ந்தது. கொரோனாவினால் 1,000 இற்கும் அதிக உயிரிழப்பை சந்தித்த 7வது நாடாக இங்கிலாந்து பதிவானது.

இதுதவிர, நெதர்லாந்து 93, ஜேர்மனி 82, பெல்ஜியம் 64, சுவிற்சர்லாந்து 33, போர்த்துக்கள் 23, பிரேசில் 22 ஆகிய உயிரிழப்புக்களும் நேற்று பதிவாகின.அதிக உயிரிழப்பை தொடர்ந்து,

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஸ்பெயின் மேலும் அதிகரித்துள்ளது. அத்துடன், புதிய தொற்றின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் 3,619 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 89 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டள்ளன. பொது இடங்களில் அல்லது நிகழ்வுகளில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மார்ச் 30 ஆம் திகதி முதல் தனது எல்லைகளை மூடவுள்ளதாக ரஷ்யா நேற்று அறவித்துள்ளது. அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து வீதிகள், புகையிரதங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் செல்லும்.

சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். ரஷ்யாவின் கடல் எல்லைகளுக்கு இது பொருந்தும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது ரஷ்ய இராஜதந்திரிகள் மற்றும் சரக்கு லொரிகளின் ஓட்டுநர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஏற்கனவே அனைத்து சர்வதேச விமானங்களிற்கும் ரஷ்யா தடை விதித்திருந்தது. அந்தநாட்டில் 1,264 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானும் தனது எல்லைகளை மேலும் இரண்டு வாரங்களிற்கு மூடியுள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,400 ஐத் தாண்டியுள்ளதால், அதன் எல்லைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான எல்லைகளை அந்த நாடு மூடியது. இப்போது மேலும் 2 வாரங்களிற்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

Total Page Visits: 178 - Today Page Visits: 1