பிரான்சில் கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்தில் 762 பேர் உயிரிழப்பு !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி தற்போது 32 292 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரான்சின் சுகாதாரத்துறை, கடந்த 24 மணிநேரத்தில் 762 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 541 பேர் மருத்துமனைகளில் உயிரிழந்துள்ளனர் என்பது மட்டுமல்லாது, நேற்று திங்கட்கிழமையினை விட 206 பேர் அதிகமாகியுள்ளது. மூதாளர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 221ஆக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த உயிரிழப்பு வீதம் இன்று கடந்த 24 மணிநேரத்தில் உயர்வடைந்துள்ளதோடு, தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

உயிரிழந்தவர்களில் 78 % வீதமானவர்கள் அண்ணளவாக 81வயதினை நெருங்கியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது 6 730 பேர் தீவிரசிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஓரு வீதமானவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 95 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 71 903 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, இதில் 28 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனக் கூறியுள்ளது.

இதுவரை 15 529 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதோடு, இவர்களில் 10 129 பேர் மருத்துவமனைகளிலும், 5 600 மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை பிரான்சில் இதுவரை 103 573 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதோடு, இவர்களில் 5497 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளங்காணப்பட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.