சங்கடங்களை நீக்கி அருள் தருவார் சங்கடஹர சதுர்த்தி நாயகன் கணபதி.

Subscribe our YouTube Channel

சங்கடஹர சதுர்த்தியாகிய இந்நன்னாளில்,முழுமுதற்கடவுளாகிய விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் உள்ள சங்கடங்கள் நீங்கி சந்தோஷக் கடலில் நீந்துவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நாம் தொடங்கும் செயல்கள் எதுவாயினும் எளிதில் நல்ல முறையில் நடைபெற விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போதும் விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.

கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை.ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது,அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர் என்கிறது புராணம்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர்.

சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று, அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசிக்க வேண்டும். பின் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது மற்றும் மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்றய நாள் முழுவதும் மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.

மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும்.அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு,பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்கின்றன புராணங்கள்.

தன்னுடைய தீய செயலால் விநாயகரிடம் சாபம் பெற்ற சந்திரன் இவ்விரதத்தை மேற்கொண்டே விமோச்சனம் பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன.எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. எல்லோர்க்கும் நலமளிக்கும் விநாயகப்பெருமானை எண்ணி விரதமிருந்து சகல வளங்களையும் பெறுவோம் பெறுவோம்.