“என் மகனை அடித்து கொன்று விட்டார்கள்” சாத்தன்குள பொலிசாருக்கு எதிராக தாயார் நீதிமன்றத்தில் மனு.!

Subscribe our YouTube Channel

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர் வடிவு.இவர் சாத்தான்குளம்பொலிசார் தாக்கியதால் தான் தன்னுடைய மகன் மகேந்திரன் உயிரிழந்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,என்னுடைய மகன்கள் துரை மற்றும் மகேந்திரன். இருவரும் பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்றனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் 18ம் திகதி தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக எனது மூத்த மகனை தேடி என் வீட்டுக்குஉதவி ஆய்வாளர் ரகுகணேஷ் உள்பட காவலர்கள் வந்தனர். பின்னர் பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது எனது மூத்த மகன் துரை வீட்டில் இல்லாததால், அங்கிருந்த மகேந்திரனை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். அங்கு மகேந்திரன் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான்.மறுநாள், இதுகுறித்து யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டி அவரை விடுவித்துள்ளனர்.

காவலர்கள் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.அங்கு மகேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சிறிது நாட்களில் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தான்.எனது மகன் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்தது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், பொலிஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அதுபோல எனது மகனின் இறப்புக்கு காரணமான பொலிசார் மீதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு தொடர்பான விசாரணை விரைவில் நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.