599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண்.! மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில் புகார்.!

Subscribe our YouTube Channel

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி. 32 வயதாகும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு club factory எனப்படும் செயலி மூலம் 599 ரூபாய் மதிப்புள்ள நைட்டியை ஆர்டர்(order) செய்துள்ளார். அதற்கான பணத்தை தன்னுடைய கணவரின் ஏடிஎம் மூலம் ஆன்லைனிலேயே செலுத்தி உள்ளார்.

சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் செல்வராணிக்கு நைட்டி டெலிவரியாவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவர், நைட்டிக்கான ஆர்டரை கேன்சல் செய்தார். அப்போது உங்கள் பணம் திரும்ப செலுத்தப்படும் என எந்தவித மெசேஜும் செல்வராணிக்கு வரவில்லை.

இதனால் ஆர்டரை கேன்சல் செய்து பணத்தை திருப்பித் தரச் சொல்லி கஸ்டமர் கேர் அதிகாரியிடம் பேசியுள்ளார். போனில் எதிர்முனையில் பேசியவர், தங்கள் செல்போனில் டீம் வியூவர் ஆப்பை பதிவிறக்கம் செய்யும்படியம் உங்களின் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றால் வங்கி விவரம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

உடனே செல்வராணியும் வங்கியின் விவரங்களைக் கூறி உள்ளார்.அதே நேரம் வங்கியிலிருந்து செல்வராணியின் கணவரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது. அதில் 60,000 ரூபாய் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து செல்வராணியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆன்லைன் மோசடி கும்பல் மூலம் ,தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராணி கணவருடன் கொரட்டூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இது ஆன்லைன் மோசடி என்பதால் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் குற்றப்பிரிவு அலுவலகத்திற்குச் சென்று புகார் அளிக்குமாறு கூறி அனுப்பிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து செல்வராணி, இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவுக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.ஆன்லைனில் கஸ்டமர் கேர் என கொடுக்கப்பட்டுள்ள எண்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் எண்தானா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொண்ட பின்னர் தொடர்பு கொள்ள வேண்டும் என ஆன்லைன் மோசடி தடுப்புப் பிரிவு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.