இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பொலிசார்.!விரக்தியில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு.!

Subscribe our YouTube Channel

திருப்பத்தூர் மாவட்டத்திலும்,ஊரடங்கை மீறிய வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்ததுடன்,அபராதம் விதித்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 27வயதான முகிலன்.இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

ஊரடங்கு நேரத்தில் முகிலன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியில் வந்துள்ளார்.ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தியேட்டருக்கு அருகில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த பகுதிக்கு வந்த, முகிலனின் வாகனத்தை தடுத்து நிறுத்திய பொலிசார் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்தி இருக்கிறார்கள்.

இதனால் விரக்தி அடைந்த இளைஞர் அருகில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். கையில் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு காவலர்கள் இருந்தப் பகுதிக்கு வந்த அவர் தீயை பற்ற வைத்துக்கொண்டார்.தீ மளமளவெனப் பரவியதால் அங்கு இங்கும் அலறி துடித்தபடி இளைஞர் ஓடியிருக்கிறார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் போர்வையை போர்த்தி தீயை அணைத்தனர். பலத்த தீக்காயமடைந்த முகிலன் தனது சாவுக்கு போலீஸ் தான் காரணம் என்று கூறினார். இதை பலர் வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர்.90 சதவிகிதம் தீக்காயம் அடைந்த நிலையில் முகிலனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சி.எம்.சி-யில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டர்.

இதனிடையே ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி பிரவீன்குமார் விசாரித்து வருகிறார். தீக்குளித்த முகிலனுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.