கொரோனாவால் இட்லி விற்கும் வாடகை ஓட்டுநர்கள்.!ஊரடங்கு தொடர்ந்தால் என்ன செய்வது..? புலம்பும் சாமானியர்கள்.!

Subscribe our YouTube Channel

கொரோனா நோய்தொற்றின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில்,சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.தினக்கூலி செய்து பிழைப்பு நடத்தி வந்தவர்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

நாட்டின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாடகை கார், ஆட்டோ உள்ளிட்ட சேவைகள் கடந்த 3 மாதங்களாக முற்றிலும் முடங்கி உள்ளன. மருத்துவ அவசர தேவைகளுக்காக மட்டும் இ பாஸ் பெற்று ஆங்காங்கே ஒருசில வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தொடர்ச்சியான வருமான இழப்பால் தவித்து வந்த சென்னையை சேர்த்த டாக்சி ஓட்டுனர் சையது அலி, தற்போது குடும்பத்துடன் இட்லி விற்று நாட்களை நகர்த்தி வருகிறார்.

இது குறித்து ஓட்டுனர் சையது அலி தெரிவிக்கையில்,வெல்டிங் கம்பெனியில் கூலி வேலை செய்து கொண்டிருந்தேன், 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் டாக்சி ஒட்டி பிழைக்கலாம் என்று லோன் போட்டு சொந்தமாக கார் வாங்கினேன். இப்போது இந்த நிலைமை நீடிக்க.. நீடிக்க, என் கார் என்னை விட்டு போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது.

மூன்று மாதங்களாக வருமானம் இல்லாத கஷ்டம் ஒருபுறம், ஏற்கனவே உள்ள கடன்களை கட்ட வேண்டும் என்கிற அழுத்தம் மறுபுறம். என்ன செய்வதென்று தெரியாமல், இப்போது நான் குடியிருக்கும் பாரம்பரிய வீட்டில் பாதி இடத்தை விற்று கடன்களை அடைத்து, கொண்டிருக்கிறோம்.5 பேர் உள்ள என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தினமும் காலை இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன்.

ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. முன்பு நான் ஒரு ஆள் கார் ஓட்டினால் 1800 ரூபாய் வருமானம் கிடைக்கும்.ஆனால், இப்போது என் குடும்பம் மொத்தமும் உழைத்து 500 ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், கையில் காசில்லை. இன்னும் சில மாதம் ஊரடங்கு நீடித்தால், இருக்கிற வீட்டையும் விற்கிற நிலை வந்துவிடும் போல” என்று கண் கலங்க தெரிவித்தார்.

இது குறித்து ஓட்டுனர் சங்க மாநில தலைவர் சதீஷ். கூறுகையில்,”ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளாக தனியார் டாக்சி பயன்பாடுகளால், பல்வேறு சிக்கல்களை வாடகை ஓட்டுனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது, 100 நாட்களாக வருமானம் இல்லை. முதல் 50 நாட்கள் எப்படியோ சமாளிக்க முடிந்தது.அடுத்த 50 நாட்கள் மிக சிரமமாக இருக்கிறது.தமிழகம் முழுவதும் உள்ள 75,000 ஓட்டுனர்கள், ஒரு நாளைக்கு 1,800 ரூபாய் குறைந்தபட்சம் சம்பாதிக்க வேண்டும். அதில் 1000 ரூபாய் வரை வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு எடுத்து வைக்க வேண்டும். அரசு லோன் கட்ட அவகாசம் கொடுத்துள்ளது.

ஆனால், அந்த அவகாசம் முடிந்த மறுநாள் லோன் கட்டாததற்காக எங்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டால், மீண்டும் லோன் வாங்க முடியாது”என கவலையுடன் தெரிவித்தார்.