சாத்தான்குளம் இரட்டை மரண வழக்கு,கொலை வழக்காக மாற்றம்:5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க CBI முடிவு.!

Subscribe our YouTube Channel

சாத்தான்குளம் தந்தை- மகன் இரட்டை மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் காவலர்களால் அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் கோவில்பட்டி சிறையில் இருவரும் உயிரிழந்தனர்.

இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,காவலர்கள் முத்துராஜா,முருகன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் சிபிஐ, இவ்வழக்கை சந்தேக மரணம் என்பதில் இருந்து கொலை வழக்காக மாற்றி,முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சார்பு ஆய்வாளர் ரகு கணேஷூம்,4வது குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கொலை, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்,தடயங்களை அழித்தல் உட்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் ஆஜராகி ஆய்வாளர் ஸ்ரீதர்,சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,காவலர்கள் முத்துராஜா,முருகன் ஆகிய 5 பேரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹேமந்த்குமார் 5 பேரையும் இன்று 11 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த இருவரில் ஸ்ரீதர் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது.உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு ஜூலை 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.