வாணி ராணி புகழ் (பூஜா) நவ்யா சாமிக்கு கொரோனா பாசிட்டிவ்.!

Subscribe our YouTube Channel

கொரோனா நோய்த் தொற்றானது வயது வித்தியாசமின்றி, ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவும் என்பதால் சினிமா படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேசமயம் குறைந்த நபர்களைக் கொண்டு சின்னத்திரை சீரியல் படப்பிடிப்பு நடத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அனுமதி அளித்தன.

இந்நிலையில் சின்னத்திரை சீரியல் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் அவருக்கு லேசான தலை வலியும் உடல் சோர்வும் இருந்துள்ளது.இதனால் பரிசோதனை மேற்கொண்ட போது பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்துள்ளது.

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை நவ்யா கூறியிருப்பதாவது, இந்த நேரத்தில் என்னுடைய சேனல் தயாரிப்பாளர்கள் சக நடிகர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். படப்பிடிப்பில் எங்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை.

ஆனாலும் டிவி துறையில் போட்டி அதிகம் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் எபிசோட் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் தான் படப்பிடிப்பு நடந்தது. நான் இந்த துறையை நம்பித்தான் இருக்கிறேன். அதனால் என்னால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என்று கூற முடியாது.

நான் நோயைப் பரப்புவதற்காக இப்படி செய்வதாக வதந்தி பரப்புகின்றனர். நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.