ஆரோக்கியத்துடன் கூடிய உணவு முறையும் மருத்துவ பயன்களும்..!

Subscribe our YouTube Channel

நம் முன்னோர்கள் உண்ணும் உணவிலேயே உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அத்தனை வகையான மூலிகைகளையும் உணவில் சேர்த்து வந்தனர்.இதனால் அன்றைய நாட்களில் நோய்கள் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அப்படியில்லை உலகம் நவீன மயமாக்களில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.இதனால் நம் பாரம்பரியமான வாழ்க்கை முறையும் பழக்க வழக்கங்களும் உண்ணும் உணவுகளும் உணவு முறைகளும் மாற்றம் அடைந்து கொண்டே செல்கின்றன.அன்று நம் முன்னோர்கள் கூறியவற்றை பின்பற்றினாலே நாமும் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

தமிழர்களுக்கு என தனித்துவமான உணவு முறையையே பின்பற்றி சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.அதாவது,தலை வாழை இலையில் அறுசுவையும் கூடிய உணவு முறையை பின்பற்றியுள்ளனர்.சோற்றை குறைவாகவும் அறுசுவையும் பொருந்திய கீரை முதலான உணவுகளை அதிகமாகவும் உட்கொண்டு வந்தனர்.உணவு உண்ணும் முறை பற்றி வள்ளுவர் தனது திருக்குறளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
அதாவது,ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால்,அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை என்பது இதன் பொருளாகும்.

நம் முன்னோர்கள் உணவே மருந்து என வாழ்ந்தார்கள்.ஆனால் இன்று நம்மில் பலர் மருந்தையே உணவாக கொள்கிறோம்.இதற்கு காரணம் நாம் நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை விடுத்து ஆரோக்கியமற்ற, முறையற்ற உணவு முறையே ஆகும்.ஆகவே இயற்கையுடன் ஒன்றித்து முன்னோர்கள் காட்டிய உணவு முறைகளை முறையாக பின்பற்றி நாமும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

புதினாவின் மருத்துவ குணங்கள்..
புதினா செடி வகையை சேர்ந்த தாவரமாகும்.பார்ப்பதற்கு சிறிய செடியாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த செடியானது இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் செழிப்பாகவும் மிக இலகுவாகவும் வளரக்கூடியது.இவை செங்குத்தாக 60 செமீ வரை வளரக் கூடியவை.வாசனை நிறைந்த தாவரமாகும்.இதன் இலையில் விட்டமின் B மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைவாக உள்ளது.இந்த செடி மருத்துவ எண்ணெய் மற்றும் வாசனை என்னை தயாரிக்க பயன்படுகிறது.

இதன் இலையை சம்பல் (துவையல்)செய்து சோற்றுடன் சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் குணமாகும். புதினா இலையை நிழலில் காயவைத்து,ஒரு பிடி அளவு 1 அல்லது 1 ½ லிட்டர் நீரில் காய்ச்சி அதை குடிநீராக்கி வேளைக்கு 50 மிலி வரை குடிக்க காய்ச்சல் குணமாகும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும் தன்மை கொண்டது.