புரட்டாதி மாதத்தின் ஆன்மீக ரகசியமும் அறிவியல் விளக்கமும்.!

Subscribe our YouTube Channel

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் புரட்டாதி மாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆன்மிக வழிபட்டு மாதமாக முன்னிலை பெறுகிறது. இம்மாதம் தமிழ் நாட்காட்டியின் படி ஆண்டு ஒன்றின் 6வது மாதம் ஆகும். அதாவது சூரியன் கன்னி இராசியுள் புகுந்து அதை விட்டு வெளியேறும் வரையிலான 30 நாட்கள் 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம்மாதமாகும்.இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும்.

அத்துடன் பூமியின் இயக்கத்தின் படி செரிமானக் குறைவும் வயிற்று பிரச்சனைகளும் ஏற்படும்.ஆதலால் அதற்கு தீர்வாக வயிற்றுக்கு நன்மை தரக்கூடிய துளசி நீரை குடிக்க அறிவுறுத்தினார் முன்னோர்கள். இந்த மாதத்தில் விரதம் மேற்கொள்ள சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.புரட்டாசியில் மழை அதிகம் பெய்யும். பூமி குளிர பெய்யும் மழையால் வெப்பம் குறையும். அதே நேரம் பூச்சிகள், கிருமிகள் அதிகரிக்கத் தொடங்கும். இந்த மாதத்தில் ஆன்மீக விசயங்கள் அதிகம் நடைபெறும்.

பெருமாள் விரதத்தோடு அம்மனுக்கு உகந்த நவராத்திரி பண்டிகைகளும் கொண்டாடப்படும் மாதம் புரட்டாசி மாதம். பலவகையான சுண்டல்கள் செய்து பிரசாதமாக கொடுக்கப்படும். இது அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகமாக்கி உடல் நலத்தை கெடுக்கும்.வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு நம் முன்னோர்கள் விரதம் இருந்தனர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை பெய்தால் திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும்.அதனால் பலவித கிருமிகள் உருவாக்கி நலத்தை கெடுக்கும்.

பெருமாள் கோயிலுக்கு செல்லும் பட்சத்தில் அங்கு அவருக்கு மிகவும் பிடித்த துளசி நீர் தீர்த்தமாக வழங்கப்படும்.அதனை அருந்துவதால் அம்மாதத்தில் ஏற்படும் நோய்கள் நீங்கும். இதனாலேயே புரட்டாதி மாதம் ஆன்மிகத்துடன் கூடிய அறிவியல் சிறப்பு வாய்ந்த மாதமாக சிறப்பு பெறுகிறது.