கொரோனா தொற்று… உயிரிழந்ததாக கூறப்பட்ட மூதாட்டி இறுதி சடங்கில் எழுந்து வந்த அதிசயம்….!

Subscribe our YouTube Channel

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது.அத்துடன் ஆக்சிஜன் பற்றாக் குறையும் நிலவுவதால் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்து விட்டதாக கருதி அவருக்கு இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர் உயிருடன் எழும்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி அருகில் உள்ள முதாலே என்ற கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட்.76வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இவருக்கு முதுமை காரணமாக உடல் சோர்வடைந்துள்ளது.இதனால் மருத்துவமனையில் அனுமதிக்க உறவினர்கள் முயற்சித்த போதும் அங்கு இடம் கிடைக்கவில்லை.இதையடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காருக்காக காத்திருந்தனர். அந்நேரம் எதிர்பாராத விதமாக சகுந்தலா கீழே விழுந்துவிட்டார். அதன் பிறகு அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை.

இதனால் அவர் இறந்து விட்டார் எனக் கருதி உறவினர்கள் சகுந்தலாவை சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர். இறுதிச்சடங்கிற்கான வேலைகள் தயாராகிக்கொண்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் அழுது கொண்டிருந்தனர். மூதாட்டியின் உடல் சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்காக பாடையில் ஏற்றப்பட்டது. அந்நேரம் திடீரென இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டி அழ ஆரம்பித்தார். அதோடு அம்மூதாட்டி கண்ணையும் திறந்தார்.

இதனால் ஆச்சரியமடைந்த உறவினர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது பாராமதி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டி சிறிது நேரம் கண் விழிக்காமல் இருந்திருந்தால் உயிரோடு எரித்து இருப்பர். இச்சம்பவத்தை காவல்துறையினரும் விசாரணை மூலம் உறுதி படுத்தியுள்ளனர்.