எமது புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ….. மீண்டும் அறிவிப்பை வெளியிட்டது வாட்ஸ்அப்….!

Subscribe our YouTube Channel

வாட்ஸ்அப் நிறுவனமானது புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பயனாளர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை முகநூல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டிருந்தது.புதிய கொள்கையால் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலுக்கு பதிலாக மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கினர்.இருப்பினும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை மாற்ற முன்வரவில்லை.

தனது விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும் என திட்டவட்டமாக அறிவித்தது.மேலும் மே 15ம் தேதிக்குள் கொள்கை விதிகளை ஏற்காவிடில் செயலி வேலை செய்யாது எனசமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுப்பிப்பை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை வாட்ஸ்அப் ரத்து செய்துள்ளதாகவும் விதிமுறைகளை ஏற்கவில்லை என்றாலும் மே 15 அன்று வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம் எனவும் மே7 அன்று செய்தி வெளியானது.

இருப்பினும் அதன் FAQ பக்கத்தில் கொடுக்கப்பட்ட ஒரு விளக்கத்தின் மூலம் வாட்ஸ்அப் இன்னும் தனது கொள்கை முடிவை கைவிடுவதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.அதில் முகநூலுக்கு சொந்தமான செய்தியிடல் பயன்பாடு புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாத பயனாளர்களின் செயலியில் ஒரு குறிப்பிட்ட வாரங்களுக்கு பின் தொடர்ந்து நினைவூட்டல்களைப் (Notifications) அனுப்பும்.சில காலத்திற்குப் பின் செயல்பாட்டை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியான நோட்டிபிகேஷன்களை பெறும் நேரத்தில் பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப்பில் வரையறுக்கப்பட்ட செயல்பாட்டை சந்திப்பார்கள்.புதுப்பிப்புகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை அனைத்தையும் இழக்கக்கூடும்.அதன்படி பயனர்கள் தங்கள் சாட் பட்டியலை அணுக முடியாது. ஆனால் நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து நினைவூட்டல்களைப் பெறும் போது உள்வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெற முடியும் என அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது மே 15 அன்று பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை இழக்கமாட்டார்கள் என அந்நிறுவனம் கூறும் அதேவேளை தொடர்ச்சியான நோட்டிபிகேஷன்களை பெற்ற சில வாரங்களுக்குப் பின் பயனாளர்கள் வாட்ஸ்அப்பில் தங்களுக்கு வரும் அழைப்புகள் அல்லது அறிவிப்புகளைப் பெற முடியாது என விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ்அப் உங்கள் தொலைபேசியில் செய்திகளையும் அழைப்புகளையும் அனுப்புவதை நிறுத்தி விடும்.

அதாவது பயனாளர்கள் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளா விட்டால் வாட்ஸ் அப் செயல்படுவதை நிறுத்தி விடும் என்பதே இதன் பொருள்.இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரும்பாலான பயனாளர்கள் ஏற்கனவே புதுப்பிப்பை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பயனாளர்களுக்கு எங்கள் புதுப்பிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க கடந்த பல மாதங்களாக செலவிட்டோம்.

அந்த நேரத்தில் அதைப் பெற்ற பெரும்பான்மையான மக்கள் புதுப்பிப்பை ஏற்றுக் கொண்டனர். வாட்ஸ்அப் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.புதுப்பிப்பை ஏற்காதவர்களுக்கு வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படாது அல்லது மே15 அன்று செயல்பாட்டை இழக்காது. வரும் வாரங்களில் வாட்ஸ்அப்பில் உள்ள பயனாளர்களுக்கு தொடர்ந்து நோட்டிபிகேஷன்களை வழங்குவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.